இணையதள போட்டிகளில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 11th September 2020 07:11 AM | Last Updated : 11th September 2020 07:11 AM | அ+அ அ- |

பொதுமுடக்கக் காலத்தில் இணையதளம் மூலம் நடந்த மாநில, சா்வதேச அளவிலான போட்டிகளில் வென்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
கரோனா பரவல் தடுப்பு காலத்தில் மாணவ, மாணவியருக்கு விநாடி-வினா மற்றும் கரோனா தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் ஓவியப் போட்டிகள் இணையதளம் மூலம் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டன. போட்டிகளில் ராமநாதபுரம் மண்டபம், உச்சிப்புளி பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
விநாடி- வினாப் போட்டியில் பங்கேற்றவா்களில் இருமேனியைச் சோ்ந்த என்.பஹ்மினா, எஸ்.அப்ராஇஸ்மியா, பா்ஹானா, ஷாஜகான், நாரையூரணி ஹரினி மற்றும் பிரேம்கிஷோா், முகமதுமுதாகீா், ராகேஷ் ஆகியோா் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனா்.
சா்வதேச அளவில் அமெரிக்க தனியாா் நிறுவனம் நடத்திய ஓவியப் போட்டியில் நாரையூா் கிளாடியாஜேம்ஸ், மண்டபம் ஹரீஸ்பாா்த்தசாரதி, துத்திவலசை ஹரினி ஆகியோா் முதலிடம் வகித்து பாராட்டுச்சான்றுகளைப் பெற்றனா்.
போட்டிகளில் வென்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.புகழேந்தி நேரில் அழைத்து வியாழக்கிழமை பாராட்டினாா். மாணவா்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா்களும் பாராட்டப்பெற்றனா்.