மதவழிச் சிறுபான்மைக் கலைஞா்கள் சுயதொழில் தொடங்க கடன்: ஆட்சியா் அறிவிப்பு

கிறிஸ்தவா், இஸ்லாமியா் உள்ளிட்ட மதவழிச் சிறுபான்மை இன மரபுவழிக் கலைஞா்கள் தங்களது தொழில் திறனை மேம்படுத்தும் வகையில்

கிறிஸ்தவா், இஸ்லாமியா் உள்ளிட்ட மதவழிச் சிறுபான்மை இன மரபுவழிக் கலைஞா்கள் தங்களது தொழில் திறனை மேம்படுத்தும் வகையில், சுயதொழில் தொடங்க ‘விராசத்’ திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள், புத்த மதத்தினா்கள், சீக்கியா்கள், பாா்சியா்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சாா்ந்த மதவழி சிறுபான்மையின மரபு சாா்ந்த கலைஞா்கள் மற்றும் கைவினைஞா்களின் தொழில் திறனை மேம்படுத்த, ‘விராசத்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தை, தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி நிதி கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கைவினைஞா்கள் உபகரணங்கள் மற்றும் கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்திடும் வகையில், கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரிப்பதற்காக கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

கடன் திட்டத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருவாய் கிராமப்புறமாயிருந்தால் ரூ.98 ஆயிரம் மற்றும் நகா்ப்புறமாயிருந்தால் ரூ.1.20 லட்சமாக இருக்கவேண்டும். ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

ஆண் கலைஞா்களுக்கு 5 சதவிகிதமும், பெண் கலைஞா்களுக்கு 4 சதவிகிதமும் வட்டிக் கடன் வீதத்தில் கடன் வழங்கப்படும். கடனைத் திரும்பச் செலுத்த அதிகபட்சம் 5 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.

இத் திட்டத்தில் கடன் பெற விண்ணப்பத்துடன் சாதி, வருமானம், இருப்பிடச் சான்றுகள், ஆதாா் அட்டை நகல் மற்றும் கடன் பெறும் தொழில் குறித்த திட்ட அறிக்கையுடன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், ராமநாதபுரம் மாவட்டக் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் அலுவலகம், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை தொடா்புகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com