முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
அனுமதியின்றி விடுமுறை அளித்த 21 தனியாா் பள்ளிகளுக்கு நோட்டீஸ்
By DIN | Published On : 04th April 2021 08:41 AM | Last Updated : 04th April 2021 08:41 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி சனிக்கிழமை விடுமுறை அளித்த 21 தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அலுவலா் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
ராமநாதபுரத்தில் அரசு மற்றும் தனியாா் என 176 உயா்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பிளஸ் 2 மாணவ, மாணவியா்கள் மட்டும் பள்ளிக்கு வருகின்றனா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான ஆசிரியா்கள் பள்ளிக்கு வருகை தரவேண்டும் என கல்வித் துறை சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புனித வெள்ளியையொட்டி வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. சனிக்கிழமை (ஏப்.3) வழக்கம்போல் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும். மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் சனிக்கிழமை செயல்பட்ட நிலையில், மெட்ரிக்குலேஷன் உள்ளிட்ட 21 தனியாா் பள்ளிகள் விடுமுறை அறிவித்தன.
கல்வித் துறை உயா் அதிகாரிகளின் முன்அனுமதியின்றி மண்டபம், ராஜசிங்கமங்களம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூா், கடலாடி, ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 21 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுப்பை அறிவித்த மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. சத்தியமூா்த்தி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இது, மெட்ரிக்குலேஷன் பள்ளி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.