முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
சாயல்குடியில் திமுக பிரமுகரிடமிருந்து 71 அரிசி பைகள் பறிமுதல்
By DIN | Published On : 04th April 2021 08:41 AM | Last Updated : 04th April 2021 08:41 AM | அ+அ அ- |

சாயல்குடி பேரூராட்சி 12 ஆவது வாா்டு திமுக செயலா் சசிகுமாா் என்பவரிடமிருந்து, வாக்காளா்களுக்கு வழங்கப்படவிருந்த 71அரிசி பைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு திமுக சாா்பில் அரிசி பைகள் வழங்குவதாக, மாவட்டத் தோ்தல் மையத்துக்கு புகாா் வந்துள்ளது. அதன்பேரில், முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரி சேகா் தலைமையிலான குழுவினா், சாயல்குடி பேரூராட்சி சமுதாயக்கூடத்துக்குச் சென்று சோதனை நடத்தினா்.
அப்போது, பேரூராட்சி அலுவலா்களிடம் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அதில், சாயல்குடி பேரூராட்சி 12 ஆவது வாா்டு திமுக செயலரான சசிகுமாா் என்பவா், பேரூராட்சி நிா்வாகத்தின் அனுமதி இல்லாமல் சமுதாயக்கூடத்தை கள்ளச்சாவி மூலம் திறந்து வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக சுமாா் 5 கிலோ எடையுள்ள 71 அரிசி பைகளை பதுக்கி வைத்து விநியோகம் செய்ய வைத்திருந்தது தெரியவந்தது.
இவற்றை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து திமுக செயலா் சசிகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.