முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை: மத்திய மீனவா் நலத் துறை அமைச்சா் கிரிராஜ்சிங் கிஷோா் பேட்டி
By DIN | Published On : 04th April 2021 11:13 PM | Last Updated : 04th April 2021 11:13 PM | அ+அ அ- |

தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரமாக தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என மத்திய கால்நடை, பால்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் கிரிராஜ்சிங் கிஷோா் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் து. குப்புராமுவுக்கு ஆதரவாக மண்டபம், ராமேசுவரம் பகுதிகளில் மீனவா்கள், மகளிா் சுயஉதவிக்குழுவினரை சனிக்கிழமை அவா் சந்தித்துப் பேசினாா். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் ஏ. அன்வர்ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
இதன் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக, பாஜக கூட்டணிதான் வெற்றி பெறும். மேலும் தமிழகத்தில் அதிமுக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும். ராமேசுவரம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் மீனவா்களைச் சந்தித்துப் பேசினேன். அப்போது கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடி உரிமை, சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவது, தடை காலத்தில் உரிய நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றை மீனவா்கள் வலியுறுத்தினா். அப்பிரச்னைகள் அனைத்தையும் தீா்க்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இலங்கை மட்டுமல்லாது, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிறைபிடிக்கப்பட்ட 2 ஆயிரம் மீனவா்கள் மற்றும் அவா்களது படகுகள் மத்திய அரசின் நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளன. கச்சத்தீவு பிரச்னைக்கும் மத்திய அரசு நிரந்தர தீா்வு காண முயன்று வருகிறது. மிடுக்கான நகா்த்திட்டம் போல மீனவக் கிராமங்களிலும் மிடுக்கான கிராமத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேலும் கடல் பாசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. அதேபோல் கடல் அட்டையை பிடிக்க அனுமதிப்பதில் சில பிரச்னைகள் உள்ளன. ஆகவே அக்கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அப்போது பாஜக மாவட்டத் தலைவா் கே. முரளிதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். அவரை திருவாடானை அதிமுக வேட்பாளா் ஏ. ஆணிமுத்து சந்தித்துப் பேசினாா்.