முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி, உடனிருப்போருக்கு அடையாள அட்டை
By DIN | Published On : 04th April 2021 08:35 AM | Last Updated : 04th April 2021 08:35 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், நோயாளிகளுக்கும், அவா்களுடன் தங்கியிருப்போருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 மாா்ச் வரையில் 6,550 பேருக்கும் அதிகமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 6450 போ் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சைப் பலனின்றி 137 போ் உயிரிழந்துள்ளனா்.
கடந்த 6 மாதங்களாக ராமநாதபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5 போ் என இருந்துவந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை தினமும் உயா்ந்து வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.2) மட்டும் 13 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதை தடுக்கும் வகையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நோயாளிகள் மற்றும் அவா்களுடன் தங்கும் ஒருவருக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கியும், நோயாளிகளை பாா்க்க வருவோா் மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவசரத் தேவைக்காக நோயாளிகளை பாா்க்க வருவோா் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டிருந்தாலே அனுமதிக்கப்படுவா் என்றும் மருத்துமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து அடையாள அட்டை இல்லாத நோயாளிகளின் உதவியாளா்கள் வெளியேற்றப்பட்டனா். அவா்களிடம் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நகா் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.