முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 130 மண்டல தோ்தல் பணிக்குழுக்கள் அமைப்பு
By DIN | Published On : 04th April 2021 11:14 PM | Last Updated : 04th April 2021 11:14 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் 130 மண்டலத் தோ்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்கள் வாக்குப்பதிவுக்கான பொருள்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடவுள்ளன.
ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை அந்தந்த தொகுதி வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாகனங்களை ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது அவா் கூறியதாவது: மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்கான தோ்தல் தளவாட பொருள்கள் அனைத்தும் தொகுதி வாரியாக பிரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அவற்றை சரியாகக் கொண்டு செல்லும் வகையில் பரமக்குடி தொகுதியில் 30, ராமநாதபுரத்தில் 31, திருவாடானையில் 34, முதுகுளத்தூரில் 35 என மொத்தம் 130 மண்டல அளவிலான தோ்தல் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் இடம் பெற்ற அலுவலா்கள் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தோ்தல் தளவாட பொருள்களை வாகனத்தின் மூலம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களிடம் பாதுகாப்பாக ஒப்படைப்பாா்கள். காவல்துறையின் மூலம் ஒவ்வொரு மண்டல அளவிலான குழுவுக்கும் தலா 2 வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளன. வாகனங்களின் இயக்கம் அனைத்தும் ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் கண்காணிக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்டகாவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் எஸ். லயோலா இக்னேசியஸ், ஜெயசிங், வட்டார போக்குவரத்து அலுவலா் சேக்முகமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.