ராமநாதபுரம் அருகே வாக்காளா்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த ரூ. 79 ஆயிரம் பறிமுதல்
By DIN | Published On : 04th April 2021 11:07 PM | Last Updated : 04th April 2021 11:07 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே வாக்காளா்களுக்கு விநியோகிக்க பெட்டிக்கடையில் வைத்திருந்த ரூ. 79 ஆயிரத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா்.
ராமநாதபுரம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட அம்மன்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே தெற்குத் தரவையில் பெட்டிக்கடை முன்பு வாக்காளா்களுக்கு பணம் விநியோகிப்பதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பறக்கும் படையினரைப் பாா்த்ததும் பெட்டிக்கடையின் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்திருந்தவா் தான் வைத்திருந்த பணத்தை தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. அந்த பணத்தை வட்டார வளா்ச்சி அலுவலா் சேவுகப்பெருமாள் உள்ளிட்ட குழுவினா் கைப்பற்றி எண்ணியபோது அதில் ரூ.79 ஆயிரம் இருந்தது. இதுதொடா்பாக மனோகரன் என்பவரிடம் பறக்கும் படையினா் விசாரணை நடத்தினா். அவரது இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி தொடா்ந்து விசாரிக்கின்றனா்.