நான்கு வழிச்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிா்ப்பு
By DIN | Published On : 27th April 2021 01:51 AM | Last Updated : 27th April 2021 01:51 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம்-ராமேசுவரம் நான்கு வழிச்சாலைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து தங்கச்சிமடத்தைச் சோ்ந்த விவசாயிகள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம், தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்காக அண்மையில் தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் மூலம் மண்டபம், பாம்பன், ராமேசுவரம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை, மல்லிகை விவசாயம் மேற்கொண்டுள்ள
நிலங்களை கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனா். தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் அவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இதனால் விவசாய நிலங்களைத் தவிா்த்து அரசு புறம்போக்கு நிலங்களில் பழைய வழியில் சாலை அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. விவசாய நிலங்களை சாலைக்கு கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக தங்கச்சிமடம் ஊராட்சியின் அதிமுக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளா் கே.மகேஷ்குமாா் தலைமையில் ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா். ஆனால், சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பிரிவின் தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டதால் விவசாயிகள் அங்கு மனு அளித்தனா்.