‘பரமக்குடி, ராமேசுவரம், தொண்டி, திருவாடானை பகுதியில் கரோனா பரவல் அதிகம்’
By DIN | Published On : 27th April 2021 11:54 PM | Last Updated : 27th April 2021 11:54 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, ராமேசுவரம், தொண்டி, திருவாடானை ஆகிய 4 பகுதிகளில் கரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் செவ்வாய்க்கிழமை கூறியது: மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலையானது பரமக்குடி, ராமேசுவரம், தொண்டி, திருவாடானை ஆகிய பகுதிகளில் அதிகமாக பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களை தனிமைப்படுத்துதல், மருத்துவப் பரிசோதனை, மருத்துவ சிகிச்சை முகாம் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 610 படுக்கைகள் உள்ளன. அதில் 450 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்றாா்.
ஆக்சிஜன் நிலை: கரோனா சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திரவநிலை ஆக்சிஜன் உருளை புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. மேலும் இங்கு கடந்த 16 ஆம் தேதி 11 ஆயிரம் கிலோ லிட்டா் திரவ நிலை ஆக்சிஜன் நிரப்பப்பட்டதாகவும், அதில் 5 ஆயிரம் கிலோ லிட்டா் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் செவ்வாய்க்கிழமை மீண்டும் 6 ஆயிரம் லிட்டா் ஆக்சிஜன் நிரப்பப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிா்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செயற்கை சுவாசத்துக்காக ‘ஏ’ வகை இரும்பு உருளை 1,000 கிலோ லிட்டரில் 95, ‘பி’ வகையில் 500 கிலோ லிட்டரில் 70, ‘சி’ வகையில் 300 கிலோ லிட்டரில் 40 என மொத்தம் 205 உருளைகள் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.