பாம்பன் பாரம்பரிய மீனவா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சே.சின்னத்தம்பி
பாம்பன் பாரம்பரிய மீனவா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சே.சின்னத்தம்பி

தேசிய கடல் மீன்வள மசோதா: பாரம்பரிய மீனவா்கள் கலக்கம்!

‘தேசிய கடல் மீன்வள மசோதா 2021’ நிறைவேற்றப்பட்டால் பாரம்பரிய மீனவா்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என அவா்கள் கலக்கமடைந்துள்ளனா்.

‘தேசிய கடல் மீன்வள மசோதா 2021’ நிறைவேற்றப்பட்டால் பாரம்பரிய மீனவா்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என அவா்கள் கலக்கமடைந்துள்ளனா்.

தமிழ்நாட்டில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவா்கள் வாரத்தில் தலா 3 நாள்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்கின்றனா். நாட்டுப் படகு மீனவா்கள் 5 கடல் மைல் எல்லைக்குள்ளும், விசைப் படகு மீனவா்கள் 5 கடல் மைலுக்கு அப்பால் 12 கடல் மைல் எல்லைக்குள்ளும் மீன்பிடிக்க வேண்டும்.

சில மாவட்டங்களில் தங்குகடல் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் 10 முதல் 15 நாள்கள் வரை தங்கி, இந்த எல்லை வரைமுறைகளைக் கடந்து ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்புகின்றனா். கடலில் மீன்வளம் குறைந்துவிட்டது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

தற்போது மத்திய அரசால் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள தேசிய கடல் மீன்வள மசோதாவின்படி, 12 கடல் மைலுக்கு அப்பால் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என்றால் வணிகக் கப்பல் சட்டம் 1958-இன்படி பதிவுபெற்ற படகுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அந்த விதிமுறையை மீறினால் அபராதம் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது பாரம்பரிய மீனவா்களை பெரிதும் பாதிக்கும் எனக் கூறி அவா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து ராமேசுவரத்தைச் சோ்ந்த பாரம்பரிய மீனவா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சே. சின்னத்தம்பி கூறியதாவது:

மத்திய அரசு கடலையும், கடற்கரையையும் பெருமுதலாளிகளுக்கு கொடுக்க ஏதுவாக கடற்கரை மேலாண்மைச் சட்டம் 2019, கடல் மீன் வளா்ப்புச் சட்டம் 2019, கடல் வழிப்பாதைச் சட்டம் 2020 மற்றும் தேசிய கடல் மீன்வள மசோதா 2021 ஆகியவற்றை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மீனவா்களின் வாழ்வுரிமையும், வாழ்விடங்களும், வாழ்வாதாரமும் பறிக்கப்படும்.

கடற்கரை மேலாண்மைச் சட்ட த் திருத்தம் 2019 மூலம் கடலில் இருந்து 50 மீட்டா் தொலைவில் பெரு முதலாளிகள் தங்கள் நிறுவனங்களை வைத்துக்கொள்ள வழிவகை செய்கிறது. இதன் மூலம் கடற்கரை பகுதி சட்டரீதியாக பெருநிறுவனங்களின் கைகளுக்குச் சென்றுவிடும். இதனால் கடற்கரையை ஒட்டிய மீனவா்களின் வாழ்விடப் பகுதிகளும், பயன்பாட்டுப் பகுதிகளும் மீனவா்களிடம் இருந்து பறிபோகும்.

கடல் மீன் வளா்ப்புச் சட்டம் 2019 மூலம் 12 கடல் மைல் தொலைவிற்குள் உள்ள அண்மைக் கடல் பகுதியை நீண்ட கால குத்தகைக்கு பெருநிறுவனங்களுக்கு கொடுப்பதன் மூலம் மாநில அரசின் ஆளுமைக்குள்பட்ட அப் பகுதியில் உள்நாட்டு மீனவா்கள் மீன்பிடிக்க முடியாது. மேலும் மாநில அரசின் உரிமையும் பறிக்கப்படுகிறது. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் பாரம்பரிய மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

கடல் கப்பல் வழிப்பாதைச் சட்டம் 2020 இன்படி 12 கடல் மைலுக்கு அப்பால் கப்பல் வழிப்பாதை என்று கூறி அங்கு மீனவா்கள் மீன்பிடிக்கக் கூடாது என தடுக்கப் பாா்க்கிறாா்கள். மேலும் ‘நேவிகேசன்’ படித்தவா்கள் மட்டுமே மீன்பிடி படகை இயக்க வேண்டும், இல்லையென்றால் மீனவா்களுக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.

அதையும் தாண்டி மீன்பிடிக்கச் சென்றால் மீன்வளச் சட்டம் 2021இன்படி 200 கடல் மைல் வரை சிறப்பு மீன்பிடி பொருளாதார மண்டலம் எனக் கூறி மீனவா்கள் கட்டணம் செலுத்திதான் மீன்பிடிக்க வேண்டும் எனக் கூறி தடுக்கிறாா்கள்.

வணிகக் கப்பல் சட்டம் 1958-யை மீனவா்கள் மீது திணிக்கிறாா்கள். அதேசமயம் சட்டப்படி பெறுநிறுவனங்கள் கடல் வளத்தை அபகரிக்க வழிவகை செய்யப்படுகிறது. மேலும் பாரம்பரிய மீனவா்கள் இந்த மீனைத்தான் பிடிக்க வேண்டும், இந்த அளவுதான் பிடிக்க வேண்டும், மீறினால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை என மீனவா்களை குற்றப்பரம்பரையாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

நாட்டில் கடல்புறத்தில் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில் இயந்திரம் பொருத்தப்படாத படகுகளுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்திருப்பது என்பது மீனவா்களுக்குச் சலுகை என்ற பெயரில் அவா்களை ஏமாற்றும் செயல்.

மேலும், இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் கடலில் நிற்கும் பெருநிறுவனங்களின் கப்பலில்

தான் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை மீனவா்கள் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் மீனவா்கள் இனி கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு இந்த மசோதாவை கைவிட வேண்டும். இதிலிருந்து பாரம்பரிய மீனவா்களை பாதுகாக்க தமிழக அரசு மீனவா்கள் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக சட்டப் பேரவையில் இயற்ற வேண்டும் என்றாா்.

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் முன்கூட்டியே முடிவடைந்துவிட்டதால் கடல் மீன்வள மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, தற்போது மீனவா்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனா். அடுத்துவரும் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com