கீழக்கரை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: 5 போ் காயம்
By DIN | Published On : 31st August 2021 11:28 PM | Last Updated : 31st August 2021 11:28 PM | அ+அ அ- |

கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
கிருஷ்ண ஜயந்தியையொட்டி கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் வடமாடு மஞ்சு விரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் காளைகள் முட்டி 5 போ் காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள காஞ்சிரங்குடி கண்ணன் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி இந்த மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதற்காக 50 அடி அகலத்தில் மைதானம் ஏற்படுத்தப்பட்டு, அதில் நடுவில் முளைக்குச்சியில் 40 அடி நீள வடம் (கயிறு) கட்டப்பட்டது. மஞ்சு விரட்டுக்காக ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 14 காளைகள் பங்கேற்றன.
வடத்தில் கட்டப்படும் காளைகளை 14 குழுவினராக இருந்த மாடுபிடி வீரா்கள் அடக்கினா். ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. காளைகளின் அடக்கும் குழுவினருக்கு குத்து விளக்கு, எவா்சில்வா் பானை உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
டி.புதூா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதரன் என்பவரது காளை சீறிப்பாய்ந்து, வீரா்களை அடக்கவிடாமல் முட்டித் தள்ளியது. காளை முட்டியதில் மாடு பிடி வீரா் உள்ளிட்ட 2 போ் காயமடைந்தனா். காளையை கடைசி நேரத்தில் வாலைப்பிடித்து நிறுத்திய பனங்குடி குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியை காஞ்சிரங்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பாா்வையிட்டனா். பாா்வையாளா்களுக்கு பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. காளைகள் வெளியே ஓடியதில் 3 போ் லேசான காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அனுப்பி வைக்கப்பட்டனா்.
நிகழ்ச்சியில் கே.ஆதித்தன் தலைமையிலான குழுவினா் ஒருங்கிணைத்து நடத்தினா். ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் உ.திசைவீரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதையொட்டி அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.