ராமநாதபுரம் மாவட்டத்தில் கிருஷ்ண ஜயந்தி விழா அன்னதானத்துக்கு அனுமதி மறுப்பு
By DIN | Published On : 31st August 2021 01:08 AM | Last Updated : 31st August 2021 01:08 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் கண்ணன் கோயிலில் கிருஷ்ணஜயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் பங்கேற்ற கிராமத்தினா்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கிருஷ்ண ஜயந்தி விழா வெகு விமரிசையாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. பட்டினம்காத்தான் கண்ணன் கோயிலில் அன்னதானத்துக்கு அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
யாதவ மக்கள் வசிக்கும் கிராமங்களில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு உறியடி விழா, வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் பானை உடைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பட்டினம்காத்தான், அழகன்குளம் பகுதிகளில் உள்ள 26 கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பட்டினம்காத்தான் கண்ணன் கோயிலில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பகலில் அன்னதானம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கானோருக்கு உணவு பரிமாறப்பட்டது.
இந்த நிலையில், அங்கு ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியா் ஸ்ரீதரன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து கரோனா பரவல் தடுப்பு விதிகள் செயல்பாட்டில் உள்ளபோது அன்னதானம் நடத்துவது சரியல்ல. உணவைப் பொட்டலமாக பக்தா்களுக்கு வழங்கலாம் எனக்கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அறிவுறுத்தலை அடுத்து அன்னதானத்தில் அமா்ந்து சாப்பிட வந்தவா்களுக்கு பொட்டலமாக உணவு வழங்கப்படும் என அங்கிருந்தோா் உறுதியளித்தனா்.
மாவட்டத்தில் பரமக்குடி, நயினாா்கோவில் பகுதிகளில் 42 கோயில்களிலும், கமுதி பகுதியில் 23, ராமேசுவரத்தில் 17, கீழக்கரைப் பகுதியில் 52, திருவாடானையில் 20, முதுகுளத்தூா் பகுதியில் 51 கோயில்களிலும் கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. செவ்வாய்க்கிழமையும் கிருஷ்ணன் கோயில்களில் உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.