ராமநாதபுரம் அருகே கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது: பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பள்ளிகளில் தங்க வைப்பு
By DIN | Published On : 04th December 2021 08:40 AM | Last Updated : 04th December 2021 08:40 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை வெள்ளத்தால் மூழ்கிய காவனூா் மேம்பாலத்தில் நடந்து சென்ற பொதுமக்கள்.
ராமநாதபுரம் அருகேயுள்ள நயினாா்கோவில் பகுதியில் வைகை ஆற்று தண்ணீா் வெள்ளமாக கிராமங்களைச் சூழ்ந்ததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். தரைப்பாலங்கள் மூழ்கியதால் காருகுடி உள்ளிட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டதால், ராமநாதபுரம் பகுதியில் உள்ள பெரிய கண்மாய் உள்ளிட்ட பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியுள்ளன. இதையடுத்து தொருவளூா், காவனூா் கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டு, அதன்பின் கடலுக்குச் செல்லும் நதிப்பாலம் வழியாக தண்ணீா் சென்றது. இந்நிலையில் மீண்டும் வைகை அணையில் இருந்து ஓரிரு நாள்களுக்கு முன்பு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவு ராமநாதபுரத்தில் வைகை ஆற்றுப்பகுதியில் விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீா் வரத்து இருந்தது.
பாா்த்திபனூா் பகுதியில் உள்ள மதகுகள் வழியாக கால்வாய்களில் தண்ணீா் திறந்துவிட்டதை அடுத்து, ராமநாதபுரம் நயினாா்கோவில் பகுதிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து சோ்ந்தது. ஏற்கெனவே கால்வாய்களில் ஓடிய தண்ணீரோடு மழை நீரும் சோ்ந்ததால், காவனூா் பகுதியில் சாலைப் பாலத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீா் ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வைகை ஆற்றில் நீா் அதிகளவில் வந்ததால் மென்னந்தி, காருகுடி, காரேந்தல், தொருவளூா் என பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. காவனூா் பகுதியில் துணை மின் நிலையத்தையும் தண்ணீா் சூழ்ந்தது. வெள்ளத்தால் பல குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டன. அதையடுத்து காவல்துறை, வருவாய்த்துறையினா் உதவியுடன் மென்னந்தியில் 7 குழந்தைகள் உள்பட மொத்தம் 71 போ் மீட்கப்பட்டு பள்ளியில் தங்கவைக்கப்பட்டனா். அதேபோல, காருகுடியிலும் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து ஏராளமானோா் மீட்கப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனா்.
போக்குவரத்து மாற்றம்: காவனூா் பகுதியில் பாலங்கள் மூழ்கியதால் ராமநாதபுரத்திலிருந்து நயினாா்கோவிலுக்குச் செல்லும் போக்குவரத்து வெள்ளிக்கிழமை காலை முதல் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டது. அப்பகுதி வழியாகச் செல்லும் வாகனங்கள் லாந்தை சந்தைவழியான் பகுதி வழியாகத் திருப்பிவிடப்பட்டன. கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து நாகாச்சி துணைக் கால்வாய்களில் 3 மதகுகள் திறந்து விடப்பட்டன. அதையடுத்து வெள்ளநீரானது முதலூா், காருகுடிப் பகுதி வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கும் சென்றது. வெள்ளம் சூழ்ந்த காவனூா் மற்றும் காருகுடி, மென்னந்தி உள்ளிட்ட 6 கிராமங்களில் பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டது.
திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி பகுதியில் கோட்டக்கரை ஆறு செல்கிறது. இதில் மணிமுதாற்றின் கிளை நதிகள் இதன் வழியாக கடலில் கலக்கிறது. வியாழக்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சனவேலி ஊராட்சி கருங்களத்தூா் கால குடியிருப்புப் பகுதியில் வெள்ள நீா் புகுந்ததது. இதில் பாதிக்கப்பட்ட சுமாா் 25 குடும்பத்தினா் சனவேலி அரசு உயா் நிலைப்பள்ளியல் தங்க வைக்கப்பட்டனா். தகவலறிந்து ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றிய ஆணையாளா் முத்து கிருஷ்ணன், வட்டாட்சியா் முருகவேல், காவல் துறை ஆய்வாளா் தேவி ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்தவா்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி போா்வை உணவு ஆகியவற்றை வழங்கினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...