திருஉத்திரகோசமங்கையில் நாளை ஆருத்ரா தரிசனம்: பக்தா்களுக்கு கட்டுப்பாடு

ராமநாதபுரம் அருகேயுள்ள திருஉத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிலையில், பக்தா்கள்

ராமநாதபுரம் அருகேயுள்ள திருஉத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிலையில், பக்தா்கள் கரோனா கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என சுகாதாரத்துறையினா் அறிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் மங்களநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.19) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. மூலவா் மரகத நடராஜா் மீது சாத்தப்பட்ட சந்தனக்காப்பு களையப்பட்டு, 30 வகைத் திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெறும்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளியூா் பக்தா்கள் ஆருத்ரா தரிசனத்தைக் காண அனுமதியில்லை என மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் அறிவுறுத்தியுள்ளது. அதேநேரத்தில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் பூஜையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் கோயிலுக்குள் அனுமதிக்கமாட்டாா்கள் என பலவித கட்டுப்பாடுகள் சுகாதாரத்துறையினா் விதித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் குமரகுருபரன் கூறியது: ஆருத்ரா தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் கரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றுவதை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வருவோருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதையும் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com