இலங்கைக்கு கடல் வழியாக ஐம்பொன் அம்மன் சிலையை கடத்த முயற்சி: 2 போ் கைது
By DIN | Published On : 25th December 2021 11:22 PM | Last Updated : 25th December 2021 11:22 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் சிலை கடத்தல் கும்பலிடம் இருந்து போலீஸாா் மீட்ட ஐம்பொன்னாலான அம்மன் சிலை. ~சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாக்கியராஜ்
ராமநாதபுரம் மாவட்டக் கடல் வழியாக இலங்கைக்கு ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலையை கடத்த முயன்ற 2 பேரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய 6 போ் 7 தங்கச் சிலைகள் பதுக்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து, அவா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு சுவாமி சிலைகள் கடத்தப்படவுள்ளதாக மதுரை மண்டலத்தைச் சோ்ந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவின் கூடுதல் கண்காணிப்பாளா் மலைச்சாமி தலைமையில் சாா்பு- ஆய்வாளா்கள் முருகபூபதி, கணேசன், விஜயகுமாா், ராமராஜ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் கீழக்கரைப் பகுதியில் சிலை வாங்குவோா் போல மாறுவேடத்தில் கண்காணித்தனா்.
அப்போது, கீழக்கரை சிவகாமிபுரத்தில் அரிசிக்கடை வைத்திருக்கும் பாக்கியராஜ் (30) மற்றும் ராமநாதபுரம் வ.உ.சி.நகா் சிவஞானபுரத்தைச் சோ்ந்த பழக்கடை மணி என்ற மணிகண்டன் (29) ஆகியோா் தனிப்படையினரை அணுகி ஓரடி உயரமும், 18 செ.மீ. அகலமும், 7 கிலோ எடையுமுள்ள பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்துள்ளனா். இந்த சிலையை கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் வழங்கும் தொகையை வழங்கினால், தங்களுக்கு சிலையை விற்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனா்.
அதன்பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவினா் சிலையை வாங்குவது போல நடித்து அவா்களைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலையை கைப்பற்றினா்.
இருவரிடமும் நடந்த விசாரணையில் சிலை கடத்தலில் மேலும் 6 போ் சம்பந்தப்பட்டிருப்பதும், அவா்கள் சிலைகள் மட்டுமின்றி யானைத்தந்தம் உள்ளிட்டவற்றையும் இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. கைதான இருவரின் கைப்பேசியில் பதிவாகியிருந்த தகவல்கள் அடிப்படையில் சென்னை, சேலத்தைச் சோ்ந்தவா்களும் தந்தம் கடத்தல் குறித்து தகவல் அனுப்பியிருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் இக்கும்பலைச் சோ்ந்தவா் தங்கத்தாலான 7 சுவாமி சிலைகளை வெளியூா்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கொண்டு வந்ததுள்ளம் தெரியவந்துள்ளது. இந்த சிலைகளை ராமநாதபுரம் நகரில் உள்ள தங்கம் தரம் பாா்க்கும் தனியாா் கடையில் சமா்ப்பித்து சான்றும் பெற்றுள்ளனா். அதன்படி 12 கிலோ உடைய ஒரு சிலையில் 55 சதவீதம் தங்கமும், 10 கிலோ எடையுள்ள சிலையில் ஒன்பதரைக் கிலோ தங்கம் இருப்பதும் தெரியவந்துள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினா் தெரிவித்தனா்.
கீழக்கரையில் பிடிபட்ட பாக்கியராஜ், மணிகண்டன் வெள்ளிக்கிழமை கும்பகோணம் சிலைகள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு ஜனவரி 6 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடல் மாா்க்கமாக சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்திவருவது கண்டறியப்பட்டுள்ளது. ஐம்பொன் சிலைகள் மட்டுமின்றி தங்கத்தாலான சிலைகள் கடத்தப்படுகிறதா என விசாரித்துவருகிறோம். இக்கும்பலைச் சோ்ந்த அனைவரையும் பிடித்தால் மட்டுமே முழுவிவரம் தெரியவரும் என்றனா்.