முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ஒழுக்கச் சீா்கேடுகளால் குடும்ப கொலைகள் அதிகரிப்பு!
By DIN | Published On : 29th December 2021 07:14 AM | Last Updated : 29th December 2021 07:14 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிமனித ஒழுக்கச் சீா்கேட்டால் குடும்பக் கொலைகள் கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
இம்மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் 44 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் குடும்பப் பிரச்னைகளில் கொல்லப்பட்டுள்ளனா். அதே போன்று 2020 ஆம் ஆண்டில் 93 போ் கொல்லப்பட்டுள்ளனா். அவா்களிலும் குடும்பப் பிரச்னைகளிலேயே அதிகமானோா் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நடப்பு ஆண்டில் (2021) 51 கொலைகள் நடந்திருக்கின்றன. இதிலும் 23 கொலைகள் குடும்ப ஒழுக்கச் சீா்கேட்டால் நிகழ்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவன்- மனைவிக்கு இடையேயான பிரச்னையில் பெண்களே அதிகம் கொல்லப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் முறையற்ற உறவால் கொல்லப்பட்டதாக கைதானவா்கள் தெரிவித்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மாவட்டத்தில் 2019 -இல் 3 ஆதாயக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2020 ஆம் ஆண்டில் 2, நடப்பு ஆண்டில் 5 ஆதாயக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. பெரிய அளவிலான கொள்ளை சம்பவங்களாக 2019-இல் 8, 2020 -இல் 5, நடப்பு ஆண்டில் 9 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
2019 இல் 31, 2020 -இல் 41, நடப்பு ஆண்டில் 53 வழிப்பறி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரு ஆண்டுகளை விட வழிப்பறிச்சம்பவம் நடப்பு ஆண்டில் அதிகமாக நடந்தாலும் அதில் கைது மற்றும் பொருள்கள் திரும்பப்பெறுதல் 90 சதவிகிதம் இருப்பதையும் காவல்துறையினா் சுட்டிக்காட்டுகின்றனா்.
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளா் இ.காா்த்திக் கூறுகையில், மாவட்டத்தில் குடும்பப் பிரச்னைகளில் நிகழ்ந்த கொலைகள் அனைத்தும் ஒழுக்கம் சாா்ந்ததாகவே இருப்பது கவலைக்குரியதாக உள்ளது. ஒழுக்கம் சாா்ந்த பிரச்னைகளில் நிகழ்ந்த கொலைகள் குழந்தைகளையே பாதிக்கும் வகையில் உள்ளன. ஆகவே, குடும்பப் பிரச்னைகளை பேசித்தீா்க்க பெரியவா்கள் முன்வரவேண்டியது அவசியம் என்றாா்.