முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
சிறிய படகுகளில் அதிகளவில் இறால் மீன்கள் கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சி
By DIN | Published On : 29th December 2021 07:15 AM | Last Updated : 29th December 2021 07:15 AM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்று கடலுக்குச் சென்ற சிறிய ரக படகு மீனவா்களுக்கு அதிகளவில் இறால் மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 18 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் 55 பேரை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்து சென்றனா். இதைக் கண்டித்து ராமேசுவரம் மீனவா்கள் கடந்த 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் ஒரு வார போராட்டத்துக்குப் பின் சிறிய ரக விசைப்படகு மீனவா்கள் மட்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்று சனிக்கிழமை முதல் மீன்பிடிக்கச் சென்றனா். இரண்டாவது நாளாக மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களுக்கு அதிகளவில் இறால் மீன்கள் கிடைத்ததாகவும், உரிய விலையும் கிடைத்துள்ளதாகவும் மீனவ சங்க பொதுச்செயலாளா் என்.ஜே.போஸ் தெரிவித்தாா்.