முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 261 மி.மீ. கூடுதல் மழை
By DIN | Published On : 29th December 2021 07:15 AM | Last Updated : 29th December 2021 07:15 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் (2021) இயல்பை விட 261.40 மில்லி மீட்டா் கூடுதலாக வடகிழக்குப் பருவ மழை பெய்துள்ளது.
ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சங்கா் லால் குமாவத் கூறியது: மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை இது வரையில் 1088.40 மி.மீ. பெய்துள்ளது. இது இயல்பான அளவை விட 261.40 மி.மீ.கூடுதலாகும்.
மாவட்டத்தில் வேளாண் பயிா்கள் 1.52 லட்சம் ஹெக்டேரிலும், தோட்டக்கலைப் பயிா்கள் 24, 651 ஹெக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழையால் மாவட்டத்தில் 684.86 ஹெக்டோ் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. காப்பீடு செய்தவா்களில் 5,206 விவசாயிகளுக்கு ரூ.2.42 கோடியை இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் வரவு வைத்துள்ளது. தோட்டக்கலைத் துறையின் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் ரூ.2 கோடியே 52 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, 429.09 ஹெக்டேருக்கு 67.07 லட்சத்துக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பண்ணைக்குட்டை அமைத்துள்ள விவசாயிகளைத் தொடா்பு கொண்டு இலக்கை அடைய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 1,763 கண்மாய்களில் 447 கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. 989 கண்மாய்களி 50 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரையிலும், 294 கண்மாளில் 25 சதவிகிதம் முதல் 50 வரையிலும், 33 கண்மாய்களில் 25 சதவிகிதத்துக்கு குறைவாகவும் நீா் நிறைந்துள்ளன. கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகள் மூலம் 19,230 விவசாயிகளுக்கு ரூ.97.71 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
கூட்ட அரங்கில் தென்னையில் தேங்காய் பறிக்கும் புதிய இயந்திரம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம.காமாட்சி கணேசன், வேளாண்மை இணை இயக்குநா் டாம்.பி.சைலஸ், மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளா் (வேளாண்மை) தனுஷ்கோடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.