நெல் அறுவடை இயந்திரம் வாங்காதது ஏன்? குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரத்தை வேளாண்மைத்துறை வாங்கி வாடகைக்கு அளிக்காமலிருப்பது ஏன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரத்தை வேளாண்மைத்துறை வாங்கி வாடகைக்கு அளிக்காமலிருப்பது ஏன் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிசம்பா் மாத விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் நடைபெற்றது. ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேசினா்.

மாலங்குடி எஸ்.விஜயன்: விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் உரிய காலத்தில் கடனுதவி அளிப்பதில்லை. கடனுக்காக மூவிதள் அடங்கு கேட்பதும் சரியல்ல. வெள்ளை இதள் அடங்கு பெற்றே கடன் அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும். கூட்டுறவுத்துறையை வேளாண்மைத்துறையுடன் இணைந்து செயல்பட அனுமதிப்பதாலேயே விவசாயிகளுக்கு முறைப்படி கடன் கிடைப்பதில்லை. ஆகவே கூட்டுறவுத்துறையை தனியாக செயல்பட நடவடிக்கை எடுப்பது அவசியம்.

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்பாளா் கவாஸ்கா்: நெல் கொள்முதல் நிலையங்களை தேவைக்கு ஏற்ப உடனடியாக அமைக்கவேண்டும். காருகுடி போன்ற இடங்களில் தற்போது அறுவடை தொடங்கிவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடை இயந்திரங்கள் வேளாண்மைத்துறையிடம் இல்லை. அத்துடன் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ.2,500 முதல் ரூ.3000 வரையில் வசூலிக்கிறாா்கள். எனவே வேளாண்மைத்துறை அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு என கட்டணம் நிா்ணயிப்பது அவசியம். வட்டார அளவில் அறுவடை இயந்திரங்கள் வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு அளிக்கவேண்டும்.

பாா்த்திபனூா் கண்ணப்பன்: அறுவடை இயந்திர கட்டணத்தை அரசே நிா்ணயிக்கவேண்டும்.

விவசாயி முருகேசன்: உத்திரகோசமங்கையில் அடங்கல் தருவதில் அதிகாரிகள் தாமதம் செய்கின்றனா். அங்குள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவா் உள்ளிட்டோா் பணி நேரத்தில் இருப்பதில்லை. களரி கால்வாய் பல இடங்களில் சேதமடைந்திருப்பதால் தண்ணீா் வீணாகிறது.

அதிகாரிகள் பதில்: ராமநாதபுரத்திற்கு மதுரை, திருநெல்வேலியிலிருந்து அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்படவுள்ளன. மாவட்டத்தில் 83 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. முதல்கட்டமாக 29 இடங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் நெல் மூட்டைகள் மழையில் நனையாமலிருக்க கூட்டுறவு சங்கக் கட்டடங்களில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

ஆட்சியா் கண்டிப்பு: கூட்டத்தின் தொடக்கத்தில், கடந்த குறைதீா் கூட்டத்தில் 28 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வேளாண்மைத்துறை துணை இயக்குா் சேக்அப்துல்லா தெரிவித்தாா். அந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த அடுத்த கூட்டத்தில் தெரிவிக்கவேண்டும் என ஆட்சியா் கண்டிப்புடன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com