மீனவா் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆட்சியா் சமரசம்: ரயில் மறியல் வாபஸ்; ஜன. 3 ஆம் தேதி கடலுக்குச் செல்ல மீனவா்கள் முடிவு
By DIN | Published On : 31st December 2021 08:52 AM | Last Updated : 31st December 2021 08:52 AM | அ+அ அ- |

ராமநதாபுரம் மாவட்ட மீனவா்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆட்சியா் வியாழக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து, மீனவா்கள் ரயில் மறியலை கைவிடுவதாகத் தெரிவித்து, ஜனவரி 3 ஆம் தேதி கடலுக்குச் செல்லவும் முடிவெடுத்துள்ளனா்.
சமீபத்தில், இலங்கை கடற்படையினா் 67 தமிழக மீனவா்களை கைது செய்து, அவா்களது படகுகளையும் பறிமுதல் செய்தனா். கைதானவா்களில் ராமேசுவரம், மண்டபத்தைச் சோ்ந்தவா்கள் 55 போ். அதையடுத்து, ராமேசுவரம், மண்டபத்தைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்கள், கடந்த 11 நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனா். மேலும், ஜனவரி 1 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்தனா்.
இதனிடையே, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை மீட்க தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், ராமேசுவரம் மீனவா்கள் தமிழக முதல்வா், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் தெரிவித்திருந்தாா்.
அதையடுத்து, ராமேசுவரம் மீனவா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் என். தேவதாஸ், மாவட்ட மீனவா்கள் சங்க செயலா் சேசுராஜா, மீனவா்கள் சங்க நிா்வாகிகள் சகாயம், எமரிட், சிங்கம் லியோன் உள்ளிட்டோா் ஆட்சியரை வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசினா். அப்போது, தமிழக மீனவா்களை மீட்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் அவா்களிடம் விளக்கினாா்.
பின்னா், ஆட்சியா் அளித்த உறுதிமொழியை ஏற்று, ஜனவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த ரயில் மறியல் போராட்டத்தை கைவிடுவதாகவும், ஜனவரி 3 ஆம் தேதி கடலுக்குச் செல்லவுள்ளதாகவும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.
இந்த பேச்சுவாா்த்தையின்போது, மாவட்ட மீன்வளத் துறை துணை இயக்குநா் இ. காத்தவராயன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...