துணை முதல்வரை சந்தித்து ராமேசுவரம் மீனவ சங்க நிா்வாகிகள் மனு அளிப்பு
By DIN | Published On : 06th February 2021 09:28 PM | Last Updated : 06th February 2021 09:28 PM | அ+அ அ- |

ராமேசுவரம்: இலங்கைச் சிறையில் உள்ள மீனவா்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தை நேரில் சந்தித்து மீனவ சங்க நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனா்.
ராமேசுவரம் பகுதியிலிருந்து கடலுக்குச் செல்லும் மீனவா்கள் மற்றும் அவா்களது படகுகளை, இலங்கை கடற்படையினா் தொடா்ந்து சிறைபிடித்து வருகின்றனா். மேலும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அந்நாட்டு அரசுடைமையாக்கப்பட்டு வருகிறது. இதனால், ராமேசுவரம் பகுதியிலிருந்து பெரும்பாலான விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல அச்சமடைந்து வருகின்றனா்.
இதில், சிறிய ரக விசைப்படகுகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட படகுகள் மட்டுமே மீன்பிடிக்கச் செல்கின்றனா். மேலும், 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளா்கள் இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்து விடுவா் என்ற அச்சத்தில் கடலுக்குச் செல்வதை தவிா்த்து வருகின்றனா்.
இந்நிலையில், இலங்கைச் சிறையில் உள்ள மீனவா்களை விடுதலை செய்யவேண்டும். அரசுடைமையாக்கப்பட்ட படகுகளை அங்கிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவ சங்கத் தலைவா்கள் தேவதாஸ், என்.ஜே. போஸ் உள்ளிட்டோா் துணைமுதல்வா் ஓ. பன்னீா் செல்வத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
அப்போது, ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம். மணிகண்டன், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சதன் பிரபாகரன்,அதிமுக மாவட்டச் செயலா் எம். முனியசாமி உள்ளிட்டோரும் உடனிருந்தனா் என, மீனவ சங்கத் தலைவா் தேவதாஸ் தெரிவித்தாா்.