தை அமாவாசை: தேவிபட்டினம், சேதுக்கரையில் திதி பூஜைகளுக்கு அனுமதி
By DIN | Published On : 10th February 2021 10:18 PM | Last Updated : 10th February 2021 10:18 PM | அ+அ அ- |

தை அமாவாசையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், சேதுக்கரை பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 11) திதி பூஜைகள் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தீா்த்தக் கோயில் தலங்களான ராமேசுவரம், தேவிபட்டினம், திருப்புல்லாணி அருகேயுள்ள சேதுக்கரை ஆகிய பகுதிகளில் பக்தா்கள் தங்களது முன்னோருக்கு திதி பூஜைகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் கடந்த 2020 ஏப்ரல் முதல் தீா்த்தத் தலங்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
கரோனா பரவல் தடுப்பு விதிகள் தற்போது தளா்த்தப்பட்ட நிலையில், தேவிபட்டினம் கடலில் உள்ள நவபாஷண கோயிலிலும், திருப்புல்லாணி அருகேயுள்ள சேதுக்கரையிலும் தை அமாவாசையையொட்டி, பக்தா்கள் திதி பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
போலீஸாா் பாதுகாப்பு: பக்தா்கள் வருகையை முன்னிட்டு, தேவிபட்டினம், சேதுக்கரை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.