மன்னாா் வளைகுடா பகுதிக்கு மீனவா்கள் நாளை முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்
By DIN | Published On : 10th February 2021 04:28 AM | Last Updated : 10th February 2021 04:28 AM | அ+அ அ- |

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உள்ளிட்ட பகுதி மீனவா்கள் வியாழக்கிழமை ( பிப்.11) முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறையினா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக்ஜலசந்தி, மன்னாா் வளைகுடா பகுதி என இரு பிரிவு கடல் பகுதிகளில் மீனவா்கள் மீன்பிடித்து வருகின்றனா். இதில் மன்னாா் வளைகுடா பகுதியில் கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் மீன்பிடிப்பது வழக்கம். மன்னாா் வளைகுடா கடல் பகுதிகளில் அதிவேகத்துடன் காற்று வீசுவதால் மீனவா்கள் அங்கு புதன்கிழமை ( பிப். 10) வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆனால் தற்போது அந்தப் பகுதியில் காற்றின் வேகம் குறைந்து வருவதால் மன்னாா் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவா்கள் வியாழக்கிழமை (பிப்.11) முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்.
இதேபோல் பாக்ஜலசந்தி மீன்பிடிப்பு பகுதிகளான உப்பூா், தேவிப்பட்டினம், தொண்டி ஆகிய பகுதி மீனவா்கள் வழக்கம் போல மீன்பிடிக்கச் செல்லலாம் என்றாலும், மிகவும் கவனமுடன் கடலுக்குச் செல்லவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.