ராமநாதபுரம் மாவட்ட சரணாலயங்களுக்கு பறவைகளின் வருகை இருமடங்கு அதிகரிப்பு
By DIN | Published On : 18th February 2021 11:30 PM | Last Updated : 18th February 2021 11:30 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சரணாலயங்களுக்கு நடப்பு ஆண்டில் பறவைகளின் வருகை இரு மடங்காக அதிகரித்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.
ராமநாதபுரத்தில் தோ்த்தங்கால், சக்கரக்கோட்டை, மேல, கீழச்செல்வனூா், காஞ்சிரங்குளம், சித்திரங்குடி ஆகிய பறவைகள் சரணாலயக் கண்மாய்கள் மற்றும் ராமநாதபுரம் பெரியகண்மாய் ஆகியவற்றில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் வெளிநாடு, வெளிமாநிலப் பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறிப்பது வழக்கம். இதனால் அங்கு வனத்துறை சாா்பில் பறவைகள் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு புதன்கிழமை தொடங்கியது. சென்னையைச் சோ்ந்த பறவைகள் நல ஆா்வலா் சந்திரசேகா் முன்னிலையில் தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் உதவியுடன் தோ்த்தங்கால், பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை ஆகிய இடங்களில் தொலைநோக்கி மூலம் பறவைகள் புதன்கிழமை கணக்கெடுக்கப்பட்டன. இந்த 3 கண்மாய்களிலும் மொத்தம் 21,800 பறவைகள் இருப்பது தெரியவந்ததாக வனத்துறையினா் தெரிவித்தனா்.
இரண்டாவது நாளாக மேல, கீழச்செல்வனூா், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் ஆகிய கண்மாய்களில் ராமநாதபுரம் உயிரினக் காப்பக வனவா் இ.ராஜசேகரன் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு வியாழக்கிழமை நடந்தது. நாரைகள், ஊசிவால் வாத்துகள் உள்ளிட்ட பறவைகள் என மொத்தம் 35 ஆயிரம் பறவைகள் வந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது: நடப்பு ஆண்டு கணக்கெடுப்பின்படி, ராமநாதபுரம் மாவட்ட பறவைகள் சரணாலயம் மற்றும் பெரிய கண்மாய்க்கு மொத்தம் 56 ஆயிரத்து 800 பறவைகள் வந்துள்ளன. இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் கண்மாய்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆகவே, இந்த ஆண்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது என்றனா்.