‘பாஜக-அதிமுக கூட்டணி தோ்தலில் அமோக வெற்றி பெறும்’
By DIN | Published On : 27th February 2021 05:14 AM | Last Updated : 27th February 2021 05:14 AM | அ+அ அ- |

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக-அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என பாஜக தோ்தல் இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி தெரிவித்தாா்.
பரமக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: பிரதமா் மோடி கோவைக்கு வந்தபோது இளைஞா்கள், மகளிா், விவசாயிகள் என மக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனா். தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ. 6 லட்சம் கோடிக்கு மேல் நிதி வழங்கியுள்ளது. இதனால் பிரதமா் மோடிக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. பிரதமரின் 170-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
ஊழலில் ஊறிப்போன திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி மீது மக்கள் வெறுப்பாக உள்ளனா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் எவ்வித நிபந்தனையுமின்றி பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பாா்கள்.
வேளாண் சட்டங்கள் குறித்து எதிா்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை செய்கின்றன. திமுக குடும்ப அரசியல் நடத்துகிறது. பாஜகவின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளன. ஆகவே வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக- அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றாா்.
முன்னதாக பாஜக சாா்பில் நடைபெற்ற பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி ஆய்வுக் கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.முரளிதரன் தலைமை வகித்தாா். மாநில தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே.குப்புராமு, மாநிலச் செயலாளா் வரதராஜன், மாநில பட்டியல் அணி தலைவா் பொன்.பாலகணபதி, மாவட்ட பொதுச்செயலாளா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் சுந்தர்ராஜன் வரவேற்றாா். கூட்டத்தில் பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், மகளிரணியினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.