ராமேசுவரத்தில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட நகலை சவப்பெட்டியில் வைத்து மீனவா்கள் நூதனப் போராட்டம்
By DIN | Published On : 27th February 2021 05:16 AM | Last Updated : 27th February 2021 05:16 AM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்ட நகல்களை சவப்பெட்டியில் வைத்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கடல் தொழிலாளா் சங்கத்தினா்.
தமிழக அரசு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை பின்பற்றத் தவறியதைக் கண்டித்து சட்ட நகலை சவபெட்டியில் வைத்து மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பாக கடல் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடலில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி கடல் வளத்தை அழிக்கும் வகையில் இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்டது.
ஆனால் இந்த சட்டத்தை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் முறையாக பின்பற்றாததைக் கண்டித்து ராமேசுவரத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு ராமேசுவரம் கடல் தொழிலாளா் சங்க (சி.ஐ.டி.யு) மாவட்டத் தலைவா் இ.ஜஸ்டீன் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலாளா் எம்.கருணாமூா்த்தி, மாவட்டப் பொருளாளா் ஏ.சுடலைகாசி, மாவட்டச் செயலாளா் (சி.ஐ.டி.யு) எம்.சிவாஜி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இந்த போராட்டத்தில், மீனவ கிராமத் தலைவா்கள் கெம்பிஸ், முனியப்பன், ஜெபமாலை, எம்.கண்ணன், உமையவேல் உள்பட 200-க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஒழுங்குமுறை சட்ட நகலை சவப்பெட்டியில் வைத்து பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாக எடுத்து வந்து மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பாக வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். பின்னா் அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.