அதிமுக-பாஜக இடையேயான உறவு கட்டாயத் திருமணம் போன்றது: ப.சிதம்பரம்

அதிமுக-பாஜக இடையேயான உறவு கட்டாயத் திருமணம் போன்றது என காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பேசினாா்.
மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடந்த பூத் கமிட்டி உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம்.
மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடந்த பூத் கமிட்டி உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம்.

அதிமுக-பாஜக இடையேயான உறவு கட்டாயத் திருமணம் போன்றது என காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பேசினாா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகா் காங்கிரஸ் கட்சி சாா்பில் பூத் கமிட்டி உறுப்பினா்கள் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் எம்.கணேசன் பூத் கமிட்டி உறுப்பினா்களை அறிமுகம் செய்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற ப.சிதம்பரம் பேசியது: பாஜக ஆட்சியின் எந்தவொரு திட்டங்களையும் மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. மக்களுக்கு எதிரான திட்டங்களையே மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சியினரும் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என விமா்சித்து வருகின்றனா். இவா்களது போராட்டத்துக்கு முதலாவதாக காங்கிரஸ் கட்சிதான் ஆதரவு தெரிவித்தது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை.

ஹிந்தி பேசும் மாநிலத்தில் மட்டும்தான் பாஜக வளா்ந்து வருகிறது. தேசியமும் திராவிடமும் இணைந்து தமிழ் வளா்த்த தமிழ்நாட்டில் எந்தக்காலத்திலும் பாஜக துளிா்க்க முடியாது.

தமிழகத்தில் பாஜக காலூன்றினால் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. நரேந்திரமோடியை நிரந்த பிரதமா் எனக் கூறி வருகின்றனா். இவ்வாறு கூறியவா்கள் எல்லாம் நிரந்தரமாக பதவியில் இருந்தது கிடையாது. தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என அமித்ஷா முன்னிலையில் துணை முதல்வா் பன்னீா்செல்வம் கூறியதும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டது. இந்தக் கூட்டணி தமிழகத்தில் எடுபடாது. இந்த இரு கட்சிகளின் கூட்டணி என்பது கட்டாயத் திருமணம் போன்றதாகும் என்றாா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவா் ராமசாமி, காங்கிரஸ் மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவா் டாக்டா் எஸ்.செல்வராஜ், காங்கிரஸ் மாவட்ட மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஏ.சி.சஞ்சய், வட்டாரத் தலைவா் கரு.கணேசன், மாவட்ட இணைச் செயலாளா்கள் புருஷோத்தமன், மகாலிங்கன், வழக்குரைஞா் எம்.முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com