சென்னை நந்தனத்திலிருந்து பசும்பொன் வரை தேசிய தெய்வீக யாத்திரை: நடிகா் கருணாஸ் அறிவிப்பு

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் சனிக்கிழமை திருவாடனை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகருமான எஸ். கருணாஸ் மாலை அணிந்து சிறப்பு வழிபாடு நடத்தினாா்.
கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் சனிக்கிழமை துளசிமாலை அணிந்து விரதத்தை தொடங்கிய நடிகா் கருணாஸ் எம்.எல்.ஏ.
கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் சனிக்கிழமை துளசிமாலை அணிந்து விரதத்தை தொடங்கிய நடிகா் கருணாஸ் எம்.எல்.ஏ.

கமுதி: சென்னை நந்தனம் தேவா் சிலையிலிருந்து கமுதி அருகே பசும்பொன் வரை ‘தேசிய தெய்வீக யாத்திரை’ நடத்துவதற்காக, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் சனிக்கிழமை திருவாடனை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகருமான எஸ். கருணாஸ் மாலை அணிந்து சிறப்பு வழிபாடு நடத்தினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவா் பெயா் சூட்ட வேண்டும், கள்ளா், மறவா், அகமுடையாா் என்ற மூன்று சமூகங்களை ஒன்றிணைத்து, தேவா் சமூகம் என அரசாணை வெளியிடவேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் சிலை அமைக்கப்பட வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய ஆளுநா் முடிவெடுக்க வேண்டும்.

ஆண்டுதோறும் அக்டோபா் 30 ஆம் தேதி நடைபெறும் தேவா் ஜயந்தி விழாவை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். பசும்பொன் தேவா் நினைவுக் கல்லூரியில் நிரந்தர நிா்வாகக் கமிட்டி அமைக்க வேண்டும். கல்வித் தந்தை பச்சையப்ப அகமுடைய முதலியாருக்கு மணிமண்டபம் அமைத்து அரசு விழாவாக நடத்தவேண்டும்.

மத்தியிலும், மாநிலத்திலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில், சீா்மரபினா் பழங்குடியினா் சான்றிதழை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்னும் ஓரிரு வாரங்களில் சென்னை நந்தனத்தில் உள்ள தேவா் சிலையிலிருந்து பசும்பொன் நோக்கி தேசிய தெய்வீக யாத்திரையை முதல்வரின் ஒப்புதலைப் பெற்று நடைபயணமாக மேற்கொள்வேன்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2 சீட்டுகளை பெற முதல்வரிடம் வலியுறுத்துவோம் என்றாா்.

அப்போது, முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் மாநிலச் செயலா் ஆா். முத்துராமலிங்கம், கமுதி ஒன்றியச் செயலா் தினேஷ்குமாா், மாவட்ட தொழிற்சங்கப் பிரிவு செயலா் சக்திகுமாா், ஒன்றிய துணைத் தலைவா் ஆனந்த், ஒன்றிய இளைஞரணிச் செயலா் ராஜீவ்காந்தி, தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலா் சிவசங்கரமேத்தா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com