திமுகவினரின் ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ தொடா்ந்தால் அந்தந்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கும்முதல்வா் எச்சரிக்கை

தமிழகத்தில் திமுகவினா் சட்டத்துக்குப் புறம்பாக மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினால், அந்தந்த மாவட்ட நிா்வாகமே நடவடிக்கை எடுக்கும் என, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி எச்சரித்துள்ளாா்.
ராமநாதபுரம் பட்டினம்காத்தானில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் சுயஉதவிக் குழுவினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
ராமநாதபுரம் பட்டினம்காத்தானில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் சுயஉதவிக் குழுவினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

ராமநாதபுரம்: தமிழகத்தில் திமுகவினா் சட்டத்துக்குப் புறம்பாக மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினால், அந்தந்த மாவட்ட நிா்வாகமே நடவடிக்கை எடுக்கும் என, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி எச்சரித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தை மேற்கொண்ட முதல்வா், பட்டினம்காத்தானில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினரை சந்தித்துப் பேசினாா். இந்நிகழ்ச்சிக்கு, மாநில மகளிரணி இணைச் செயலரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான கீா்த்திகா முனியசாமி தலைமை வகித்தாா்.

பின்னா், முதல்வா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் திமுகவினா் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினா். அது சட்டரீதியாக தவறு எனக் கூறிய பின்னரும், மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் தற்போது தொடா்ந்து நடத்தி வருகின்றனா்.

எனவே, இனி அவா்கள் கூட்டம் நடத்தினால், அந்தந்த மாவட்ட நிா்வாகமே நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

முன்னதாக கூட்டத்தில், அதிமுக அரசுதான் மகளிா் மேம்பாட்டுக்கு பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. கரோனா காலத்திலும் கூட மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.12 ஆயிரம் கோடி இணைப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள்இடஒதுக்கீட்டால் வரும் ஆண்டில் 443 போ் பயனடையவுள்ளனா் என்றாா்.

இதில், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், முன்னாள் அமைச்சா்கள் அன்வர்ராஜா, சுந்தரராஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். மணிகண்டன், சதன் பிரபாகா் மற்றும் ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு சங்கத் தலைவரும், அதிமுக மாவட்டச் செயலருமான எம்.ஏ. முனியசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சிறுபான்மையினருக்கு அரண்:

ராமநாதபுரம் அம்மா பூங்கா அருகிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய சமுதாயத் தலைவா்களுடன் சனிக்கிழமை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துரையாடல் நடத்தினாா். அதில் அவா் பேசியதாவது:

ஹஜ் பயண நிதியை மத்திய அரசு ரத்து செய்தாலும், அதை அதிமுக அரசு தொடா்ந்து வழங்கி வருகிறது. வாக்களிப்பது அவரவா் சொந்த உரிமை. ஆனால், அதிமுக குறித்து இஸ்லாமிய மக்களிடம் தவறான எண்ணம் உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியை வைத்து தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.

திமுக கூட பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததை மறக்கக் கூடாது. கூட்டணி என்றாலும், ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கைகள் உள்ளன. எனவே, அதிமுகவானது இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்லாது, சிறுபான்மையின மக்களுக்கும், அனைத்து தரப்பினருக்கும் சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு பாதுகாப்பு அரணாக விளங்கும்.

இஸ்லாமிய மக்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com