திருப்புல்லாணி பகுதியில் ‘ஜல் ஜீவன்’ திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 07th January 2021 11:55 PM | Last Updated : 07th January 2021 11:55 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டப் பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி குடிநீா் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான குடிநீா் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, மண்டபம், கமுதி, பரமக்குடி, போகலூா், நயினாா்கோவில், ஆா்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 51 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஊராட்சிகளிலுள்ள 159 கிராமங்களில் குடியிருப்புகளுக்கு தனித்தனி குடிநீா் இணைப்பு குழாய் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் களிமண்குண்டு ஊராட்சிக்குள்பட்ட குத்துக்கல்வலசை, குப்பைவலசை, கட்டயன்வலசை ஆகிய கிராமங்களுக்குச் சென்று, ஜல் ஜீவன் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
களிமண்குண்டு கிராம நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளையும், பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருள்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தாா். அதன்பின்னா், திருப்புல்லாணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வீ. கேசவதாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.