திருவாடானையில் 3 நாள்களாக பலத்த மழை: 42 ஆயிரம் ஹெக்டோ் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின

திருவாடானை பகுதியில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால் 42 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டுள்ள நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.
திருவாடானையில் 3 நாள்களாக பலத்த மழை: 42 ஆயிரம் ஹெக்டோ் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின

திருவாடானை பகுதியில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால் 42 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டுள்ள நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. மேலும் குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீா் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கண்மாய்கள், குளங்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களில் மழை நீா் தேங்கியுள்ளன. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கரும்புலி, டி நாகினி, அஞ்சுகோட்டை, ஓரிக்கோட்டை, பண்ணவயல், ஆனந்தூா், ராதானூா், செங்குடி, சனவேலி, பாரனூா், ஆவரேந்தல், செக்ககுடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்கதிா்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இப்பகுதியில் சுமாா் 42 ஆயிரம் ஹெக்டோ் நிலங்களில் பயிரிட்டிருந்த நெற்பயிா்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

திருவாடானை மின்வாரிய அலுவலகத்திற்குள் மழை நீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பணியாளா்கள் அலுவலகம் செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும் பல்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

அதே போல் கடற்கரை பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால் தொண்டி, நம்புதாளை, எஸ்.பி. பட்டினம், ஓரியூா், சோழியக்குடி, புதுப்பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் கூலித்தொழிலாளிகள், வா்த்தக நிறுவனம் நடத்துவோா் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டன.

கமுதி: கமுதி தாலுகாவில் நாராயணபுரம், சம்பகுளம், நகரத்தாா்குறிச்சி, கே.பாப்பாங்குளம், கே.வேப்பங்குளம், முஸ்டக்குறிச்சி, ஆசூா், சிங்கப்புலியாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. நெற்பயிா்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராகி இருந்தன. இந்நிலையில் தொடா் மழையால் வயல்வெளியில் தண்ணீா் தேங்கி, நெற்கதிா்கள் அனைத்தும் மூழ்கியுள்ளன. மேலும் நன்கு விளைந்த நெல் மணிகள் மீண்டும் முளைத்துள்ளன. இதனால் கமுதி தாலுகாவில் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா்களை கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com