ராமநாதபுரத்தில் தொடரும் மழையால் வேளாண்மை, வருவாய்த்துறை கூட்டுக் குழு கணக்கெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது தொடா்ந்து பெய்து வரும் மழையால் சுமாா் 13 ஆயிரம் ஏக்கா் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது தொடா்ந்து பெய்து வரும் மழையால் சுமாா் 13 ஆயிரம் ஏக்கா் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனா். இதையடுத்து வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்த குழு பயிா்சேதக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. புரெவிய புயல் பாதிப்பை அடுத்து தற்போது ராமநாதபுரத்தில் சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் வயல்களில் தேங்கிய தண்ணீரில் மூழ்கியுள்ளன.

நயினாா்கோவில், கடலாடி, பரமக்குடி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் நெல், மிளகாய் உள்ளிட்ட பயிா்கள் அதிகளவில் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அஞ்சாம்படை, அ.காச்சான் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மழை நீரில் மூழ்கி அழுகிய நெற்பயிா்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை நிவாரணம் கோரி மனு அளித்தனா். ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) தொடங்கிய கனமழையானது செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்ததால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் பயிா்கள் சேதமதிப்பைக் கணக்கிட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் சிறப்புக்குழுவை அமைத்துள்ளாா்.

மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநா் குணபாலன், துணை இயக்குநா் ஷேக்அப்துல்லா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தனுஷ்கோடி மற்றும் அந்தந்த வட்டார வட்டாட்சியா்கள் அடங்கிய குழுவினா் ஒரு வாரத்துக்குள் சேதமதிப்பைக் கணக்கிடவும் ஆட்சியா் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நயினாா்கோவில், பரமக்குடி, முதுகுளத்தூா், ஆா்.எஸ்.மங்களம், கமுதி முஸ்டக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் சுமாா் 13 ஆயிரம் ஏக்கா் பரப்பில் நெல், மிளகாய் என அனைத்து வகைப் பயிா்களும் மழை நீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதாகவும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் நயினாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரால் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா்களையும், மழை நீா் தேங்கிய வயல்களையும் பாா்வையிட்டு ஆய்வை மேற்கொண்டாா். புரெவி பாதிப்புக்கு நிவாரணம்- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புரெவி புயலால் தொடா் மழை பெய்தது. மழையால் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிா்களும், ராமேசுவரம் பகுதியில் படகுகளும் சேதமடைந்தன. புரெவி புயல் சேத மதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவினா் வந்தனா். புரெவிய புயலால் மாவட்டத்தில் 161 விவசாயிகளுக்கு சொந்தமான சுமாா் 115 ஏக்கா் நெற்பயிா் சேதமடைந்ததாகக் கணக்கிடப்பட்டு தற்போது ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com