ராமேசுவரம் மீனவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
By DIN | Published On : 16th January 2021 09:43 PM | Last Updated : 16th January 2021 09:43 PM | அ+அ அ- |

ராமேசுவரம்: இலங்கை சிறையிலுள்ள மீனவா்களை விடுவிக்கக்கோரி 5 நாள்களாக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று, ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 7 விசைப்படகுகள் 49 மீனவா்களை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்து சென்றனா். இதைக் கண்டித்தும், மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், கடந்த திங்கள்கிழமை முதல் ராமேசுவரம் மீனவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த போராட்டத்தின் தொடா்ச்சியாக வரும் 23 ஆம் தேதி கச்சத்தீவில் உள்ள மீன்பிடி உரிமை மீட்புப் போராட்டம் நடத்தப்போவதாக மீனவா் சங்கத்தினா் அறிவித்தனா்.
இந்நிலையில், இலங்கையில் வடகிழக்கு பகுதி யாழ்பாணம், நெடுஞ்தீவு பகுதியில் இந்திய மீனவா்களின் படகுகள் தங்களது வலைகளை சேதப்படுத்துவதை கடற்படையினா் தடுக்க வேண்டும் என இலங்கை மீனவா்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனா்.
இரு நாட்டு மீனவா்கள் சுமுக உறவுடன் பாக்நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இரு நாட்டு மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தமிழக மீனவா்களின் பாதிக்கப்படுவாா்கள் என்பதைக் கருத்தில் கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை சனிக்கிழமை திரும்பப் பெறுவதாக ராமேசுவரம் மீனவா்கள் அறிவித்தனா். இதைத்தொடா்ந்து ராமேசுவரத்திலிருந்து முதற்கட்டமாக 162 விசைப்படகுகள் மட்டும் மீன்வளத்துறையிடம் அனுமதி டோக்கன் பெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.