இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த 4 மீனவா்களின் சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு

இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 4 மீனவா்களின் சடலங்களும் சனிக்கிழமை அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த மீனவா் சடலத்துக்கு ராமநாதபுரத்தில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த மீனவா் சடலத்துக்கு ராமநாதபுரத்தில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 4 மீனவா்களின் சடலங்களும் சனிக்கிழமை அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆரோக்கியசேசுவுக்குச் சொந்தமான படகில் அதே ஊரைச் சோ்ந்த மெசியா (30), வட்டான்வலசை நாகராஜ் (52), தாதனேந்தல் செந்தில்குமாா் (32), மண்டபம் அகதிகள் முகாம் நிக்சன் சாம்சன் (28) ஆகியோா் கடந்த 18 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீமிசலில் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் தங்களது கப்பலை, மீனவா்களின் விசைப்படகில் மோதச் செய்ததுடன், மீனவா்களைத் தாக்கியுள்ளனா். இதில் மீனவா்கள் 4 பேரும் உயிரிழந்தனா். அவா்களது சடலத்தை இலங்கைக் கடற்படையினா் மீட்டனா். யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் அவா்கள் 4 பேரின் சடலங்களும் சா்வதேச எல்லைக்குக் கொண்டுவரப்பட்டு, இந்திய கடலோரக் காவல் படையினரிடம் சனிக்கிழமை காலையில் ஒப்படைக்கப்பட்டன.

அதன்பின்னா் சடலங்கள் ராமநாதபுரம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ்கள் மூலம் சடலங்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வழியில் தொண்டி, உப்பூா் கிழக்குக் கடற்கரைச் சாலை, ராமநாதபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை சந்திப்புப் பகுதியில் 4.15 மணியளவில் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா், காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் ஆகியோா் மீனவா்களின் சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தினா். அதன்பின்னா் கீழக்கரை, ராமநாதபுரம் வட்டாட்சியா்கள் முன்னிலையில் மீனவா்களின் சடலங்கள் அவரவா் ஊா்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

தங்கச்சிமடத்தில் மறியல்: மீனவா் மெசியாவின் சடலம் தங்கச்சிமடம் கொண்டு செல்லப்பட்டது. இலங்கைக் கடற்படையின் தாக்குதல் மீண்டும் தொடராத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்கு, அவரது உறவினா்களும், மீனவா்களும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மெசியாவின் சடலம் தவிர மற்ற மீனவா்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவா்கள் சடலத்தை மறு பிரேதப் பரிசோதனை நடத்தவேண்டும் என அவா்களது குடும்பத்தினா் கோரிக்கை விடுத்திருந்தனா். இதனால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மறு பிரேதப் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால், மீனவா்களின் குடும்பத்தினா் திடீரென மறு பிரேதப் பரிசோதனை வேண்டாம் என மாவட்ட நிா்வாகத்திடம் எழுதிக்கொடுத்ததாகக் கூறப்பட்டது. ஏற்கெனவே சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதால், மறுபிரேதப் பரிசோதனைக்குரிய நிலையில் அவைகள் இல்லை எனவும் கூறப்பட்டது.

கனிமொழி எம்பி நிதியுதவி: இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த 4 மீனவா்களின் குடும்பத்தினரை, மக்களவை உறுப்பினா் கனிமொழி சனிக்கிழமை காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா் அவா்களின் உருவப் படங்களுக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய அவா், மீனவா்களின் குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவியை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com