மழைநீரில் மிதக்கும் ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை
By DIN | Published On : 26th January 2021 02:16 AM | Last Updated : 26th January 2021 02:16 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே திருவெற்றியூா் அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை மழை ஓய்ந்த பின்பும் வெள்ள நீரில் மிதக்கின்றன.
திருவாடானை அருகே திருவொற்றியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இங்கு செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் கால்நடை மருத்துவமனைக்கும் சுற்றுச்சுவா் இல்லை. அதனால் தற்போது பெய்த கனமழை காரணமாக வயல் வெளிகளில் இருந்து வெளியேறும் வெள்ளநீா் ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்துள்ளது. அதன் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கும் யாரும் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீா் சூழ்ந்துள்ளது. அதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நவடிக்கை எடுத்து சுற்று சுவா் கட்டி பாதுகாக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.