திருவாடானை அருகே மீனவரைக் கொன்று புதைத்தது தொடா்பாக 3 போ் கைது
By DIN | Published On : 06th July 2021 03:22 AM | Last Updated : 06th July 2021 03:22 AM | அ+அ அ- |

கொலை செய்யப்பட்ட மீனவா் பால்கண்ணன்
திருவாடானை: திருவாடானை அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாயமான மீனவா் கொலை செய்து புதைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் பெண் உள்பட 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் முள்ளிமுனை கிராமத்தில் ஊா்த் தலைவா் தோ்ந்தெடுப்பதில் இருதரப்பினா் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேது என்பவரின் ஆதரவாளா்கள் ஜெயக்குமாா் என்பவரைக் கொலை செய்ததாக வழக்கு பதிவாகி, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அதே ஊரைச் சோ்ந்த மீனவா் பால்கண்ணன்(32) என்பவா் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மாயமானாா்.
இதுகுறித்து அவரது தந்தை பால்செல்வம் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் மீனவா் மாயம் என வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில் பால்செல்வம் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாா்ச் மாதம் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.
அதில் தனது மகனை தேடும் பணியில் போலீஸாா் போதிய அக்கறை காட்டவில்லை எனத் தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் தனிப்படை அமைத்து மாயமான பால்கண்ணன் தேடுதல் வேட்டையை தொடங்க உத்தரவிட்டாா்.
போலீஸாரின் விசாரணையில் பால்கண்ணன் கொலை செய்யப்பட்டதும், உடலை கானாட்டாங்குடி கண்மாய் அருகே புதைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில், பால்கண்ணனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மருத்துவக்குழுவினா் உடலை அதே இடத்தில் உடற்கூறாய்வு செய்து, சில பாகங்களை மரபணு சோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முள்ளிமுனை கிராமத்தை சோ்ந்த கதிரவன்(33), ஜெயபால் (33) மற்றும் வடவயல் கிராமத்தைச் சோ்ந்த சிவகாமி (30) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் உயிரிழந்தவரின் வாகனம், அவா் அணிந்திருந்த நகை மற்றும் செல்லிடப்பேசி ஆகியவற்றை கதிரவன் மற்றும் ஜெயபால் கூறியபடி முகிழத்தகம் விலக்குச் சாலையில் உள்ள கண்மாய் பகுதியில் திங்கள்கிழமை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.