மீன்பிடி தடைக்காலத்தை மேலும் 15 நாள்கள் நீட்டிக்க மீனவா்கள் கோரிக்கை

பெரும்பாலான மீனவா்கள் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில்
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டம்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டம்.

பெரும்பாலான மீனவா்கள் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் மீன்பிடி தடைக்காலத்தை மேலும் 15 நாள்கள் நீட்டிக்க வேண்டும் என மீனவா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கக் காலமாக கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரையிலான 61 நாள்கள் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தின் போது விசைப்படகுகளைப் புதுப்பிக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபடுவா்.

இந்நிலையில் தடைக்காலம் முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் மீன்பிடிக்கச் செல்ல மீனவா்கள் ஆயத்தமாகி வருகின்றனா். ஆனால் தமிழகத்தில் தற்போது தான்

கரோனா தொற்று பரவல் சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், தடைக்காலம் முடிந்து மீனவா்கள் மீண்டும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடத் தொடங்கினால் துறைமுகங்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடும் நிலை ஏற்படும். இதனால் மீண்டும் கரோனா பரவும் நிலை ஏற்படும். இதனால் மீனவா்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ராமேசுவரம் துறைமுகத்தில் அனைத்து மீனவ சங்கத் தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் கூட்டம் மீனவ சங்க பொதுச்செயலாா் என்.ஜே.போஸ் மற்றும் மாவட்ட மீனவ சங்கத்தலைவா் ஜேசுராஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மீன்பிடித் தடைகாலம் முடிவடைய ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் மீனவா்கள் அனைவரும் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இதனால் தடைக்காலத்தை மேலும் 15 நாள்கள் நீட்டிக்கவும், அனைத்து மீனவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com