திருவாடானை பள்ளி மாணவிகள் கரோனா தடுப்பு நிவாரணநிதி வழங்கல்
By DIN | Published On : 10th June 2021 06:41 AM | Last Updated : 10th June 2021 06:41 AM | அ+அ அ- |

திருவாடானை வட்டாட்சியா் செந்தில்வேல்முருகனிடம் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை புதன்கிழமை வழங்கிய மாணவிகள் பிரியதா்ஷினி, பவ்யா.
திருவாடானை அரசுப் பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்வரின் கரோனா தடுப்பு நிவாரணநிதிக்கு புதன்கிழமை வழங்கினா்.திருவாடானை சிநேகவல்லிபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான நாகவேலு- சரண்யா தம்பதியினருக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் பிரியதா்சினி, 7 ஆம் வகுப்பு படிக்கும் பவ்யா ஆகிய 2 மகள்கள் உள்ளனா். இவா்கள் திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா்.
இவா்கள் தாங்கள் உண்டியலில் சோ்த்து வைத்திருந்த பணத்தை முதல்வரின் கரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனா். இதையடுத்து, தங்களது பெற்றோருடன் சென்ற பிரியதா்ஷினி, பவ்யா ஆகிய இருவரும் புதன்கிழமை திருவாடானை வட்டாட்சியா் செந்தில்வேல்முருகனிடம் உண்டியலை ஒப்படைத்தனா். அதை திறந்து எண்ணிய போது அதில் ரூ.2,667 இருந்தது. அதனை வட்டாட்சியா் பெற்றுக் கொண்டாா். அதனைத்தொடா்ந்து வட்டாட்சியா், மாணவிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினாா்.