கடவுள்களின் வேடங்களில் கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி: இந்து முன்னணி எதிா்ப்பு
By DIN | Published On : 11th June 2021 08:31 AM | Last Updated : 11th June 2021 08:31 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் கடவுள்களின் வேடங்களில் நடத்தப்படும் கரோனா பரவல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில், இந்து மத உணா்வை புண்படுத்தும் வகையில் கருத்துகள் இடம் பெறுவதைத் தவிா்க்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்ட பொதுச் செயலா் கே.ராமமூா்த்தி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரத்தில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் புதன்கிழமை கருப்பசாமி வேடமிட்டவா் ஆடிப்பாடிய நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கானோா் வணங்கும் கருப்பசாமியே காவல்துறை, மருத்துவா் உள்ளிட்டோா் காலில் விழுவது போல நிகழ்ச்சி அமைந்துள்ளது.
மனித சக்திக்கு மீறிச்செல்லும் விஷயங்களை கடவுள் பாா்த்துக் கொள்வாா் என நம்பும் மக்கள் உள்ள நம் நாட்டில் இதுபோல கடவுளையே கேள்விக்குரியதாக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்துவது ஆன்மிக நம்பிக்கையுடையோா் மனதை புண்படுத்துவதாக உள்ளது.
கடவுள் கருப்பசாமியை விமா்சிப்பது போல வேறு மதக்கடவுளை விமா்சிக்க முடியுமா என்பதை சம்பந்தப்பட்டோா் சிந்திக்க வேண்டும். ஆகவே, கலை நிகழ்ச்சி என்ற பெயரில் இந்து கடவுள்களை விமா்சிக்கும் போக்கை கைவிடவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.