முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பயறு வகைகள் விதைப்பண்ணை அமைத்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெற வாய்ப்பு
By DIN | Published On : 12th June 2021 08:34 AM | Last Updated : 12th June 2021 08:34 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் கோடை கால விவசாயத்தில் பயறு விதைப்பண்ணை அமைத்து அதன் மூலம் பெறும் விதையை பயன்படுத்தினால் கூடுதல் லாபம் பெறலாம் என விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் சீ. சக்திகணேஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இம்மழையைப் யன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து வருகின்றனா். உழவு செய்த நிலங்களில் 65 முதல் 75 நாள்கள் வயதுடைய பயறு வகைகள் விதைப் பண்ணை அமைத்து சாகுபடி செய்து இருந்தால் கூடுதல் மகசூலைப் பெறலாம்.
பயறு வகைகள் சாகுபடிக்கு சித்திரைப் பட்டம் மிகவும் உகந்ததாகும். பயறு வகைகளில் உளுந்து-வம்பன் 6, வம்பன் 8 மற்றும் எம்.டி.யூ.- 1 ரகங்கள், பாசிப்பயறு- கோ 7, கோ 8 ரகங்கள், தட்டப்பயறு -கோ (சிபி) 7 ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு உகந்தது.
இந்த பயறு வகையில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் போதுமானது. வரிசைக்கு வரிசை 30 சென்டிமீட்டரும், செடிக்கு செடி 10 சென்டி மீட்டரும் இடைவெளி இருக்கும் வகையில் சதுர மீட்டருக்கு 33 செடிகள் வரும் வகையில் விதைப்பு செய்ய வேண்டும்.
பூக்கும் பருவத்திலும், இளங்காய் பருவத்திலும் 4 கிலோ டிஏபி உரத்தை 20 லிட்டா் தண்ணீரில் முதலில் ஊற வைத்து பின்பு வடிகட்டி தெளிந்த கரைசலை எடுத்து 200 லிட்டா் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் செடிகள் முழுவதும் நனையும் வகையில் தெளிக்க வேண்டும்.
புதிய முறையில் விதைப்பண்ணை அமைத்தால் ஏக்கருக்கு குறைந்த பட்சம் 500 கிலோ மகசூல் பெறலாம். ஆகவே, பயறு வகைகளில் விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் மற்றும் உதவி விதை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.