கடைகள் திறப்பு: ராமநாதபுரத்தில் இயல்புநிலை
By DIN | Published On : 15th June 2021 06:33 AM | Last Updated : 15th June 2021 06:33 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் நகரில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால் திங்கள்கிழமை இயல்புநிலை காணப்பட்டது.
இம்மாவட்டத்தில் கடந்த மாா்ச் முதலே கரோனா தடுப்பு பொதுமுடக்கத்தால் பெரும்பாலான கடைகள்அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், திங்கள்கிழமை காலை மதுக்கடைகள், தேநீா் கடைகள் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்டதால், பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடைகள் திறந்தாலும் காய்கனி விற்பனை ராஜா பள்ளி மைதானம், புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலேயே நடைபெற்றன. வழிவிடுமுருகன் கோயில் திறக்காத நிலையில், அக்கோயில் முன்பு திருமணங்கள் நடைபெற்றன. அனைத்து வங்கிக் கிளைகளிலும், ஏடிஎம் மையங்களிலும் வழக்கம்போலவே மக்கள் கூட்டம் அதிகமிருந்தது.
ராமநாதபுரம் கேணிக்கரை சந்திப்பு, வழிவிடுமுருகன் கோயில், காட்டூரணி பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகளில் மதுப் பிரியா்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தை விட புறநோயாளிகள் கூட்டம் அதிகமாக இருந்து.
தொடரும் அபராதம் விதிப்பு: ராமநாதபுரம் நகரில் திறந்திருந்த உணவகங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் வந்து உணவுப் பொட்டலங்களை வாங்கிச் சென்றனா். ஆனால், நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட கரோனா பரவல் தடுப்புக் குழுவினா் கடைகளில் பணிபுரிவோா் முகக்கவசம் அணிந்திருந்தாலும், சரியாக அணியவில்லை எனக்கூறி ரூ. 200 முதல் ரூ. 500 வரையில் அபராதம் விதித்து வசூலித்ததாக வணிகா்கள் புகாா் தெரிவித்தனா்.