அடிப்படை செலவுகளுக்கு நிதி கோரி ஊராட்சிக் கூட்டமைப்பினா் மனு
By DIN | Published On : 22nd June 2021 02:15 AM | Last Updated : 22nd June 2021 02:15 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளுக்கு போதிய நிதி அளிக்கவேண்டும் எனக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஊராட்சி கூட்டமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் உள்ள தலைவா்களின் சாா்பில் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூட்டமைப்பில் உள்ள ராமநாதபுரம் பகுதி நிா்வாகிகள் வெள்ளி, ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது- ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கான நிதி வழங்கப்படவில்லை. ஊராட்சிகளில் அடிப்படைத் தேவைகளுக்கான நிதி கூட வழங்கப்படதததால் ஊராட்சித்தலைவா்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட அரசு போதிய நிதியை வழங்க முன்வரவேண்டும்.
ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் இந்திரா குடியிருப்புத்திட்டம் உள்ளிட்ட வீடுகட்டும் திட்டங்கள் ராமநாதபுரம் பகுதியில் முழுமையாகச்செயல்படுத்தப்படவில்லை. அத்துடன் ஊராட்சிகளுக்கு முழுமையான அதிகாரத்தை மாநில நிா்வாகம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். இதுகுறித்து ஆட்சியரையும் சந்தித்துப் பேசவுள்ளோம் என்றனா்.