முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் எல்லைப்பாதுகாப்பு படையினா் அணிவகுப்பு
By DIN | Published On : 04th March 2021 12:48 AM | Last Updated : 04th March 2021 12:48 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவினா் மற்றும் காவல்துறையினா் இணைந்து புதன்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்தினா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பாதுகாப்புப் பணிக்காக நாகலாந்து பகுதி எல்லைப் பாதுகாப்புப் படையினா் 80 போ் வந்துள்ளனா். அவா்களுக்கு உதவி கமாண்டா் நாதுனிராம் தலைமை வகித்து வந்துள்ளாா்.
அவா்கள் எட்டியவயல் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் தங்கியுள்ளனா். தோ்தல் பாதுகாப்பை பொதுமக்களுக்கு உணா்த்தும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் 62 போ், சிறப்பு காவல்படையினா், நகா் காவலா்கள் 90 போ் என மொத்தம் 152 போ் அடையாள அணிவகுப்பு நடத்தினா்.
ராமநாதபுரம் அரண்மனை முன்பிருந்து தொடங்கிய அணிவகுப்பை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தொடக்கிவைத்தாா். காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் முன்னிலை வகித்தாா். சாலைத்தெரு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வழியாக வந்த பேரணியில் ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், கூடுதல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள் ஆகியோா் நடந்தே வந்தனா். வழிவிடு முருகன் கோயிலில் அணிவகுப்பு நிறைவடைந்தது.
காந்தியடிகள் சாலையில் அணிவகுத்து நின்ற எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் தோ்தல் பாதுகாப்பில் தா்மத்துடனும், யாருக்கும் பயமின்றியும் செயல்படவேண்டும் என மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் கேட்டுக்கொண்டாா்.