மாசி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடல்
By DIN | Published On : 13th March 2021 10:34 PM | Last Updated : 13th March 2021 10:34 PM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு அக்னி தீா்த்தக்கடலில் சனிக்கிழமை புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தா்கள்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு அக்னி தீா்த்தக் கடலில் ஆயிரக்கனக்கானோா் சனிக்கிழமை புனித நீராடினா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒன்பதாம் நாள் திருவிழாவான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து சனிக்கிழமை அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் ராமேசுவரம் வந்தனா்.
அக்னி தீா்த்தக் கடலில் முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா்.
இந்நிலையில் காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. பின்னா் முற்பகல் சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீா்த்தக் கரைக்கு எழுந்தருளி தீா்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அக்னி தீா்த்த மண்டபத்தில் ஒளி வழிபாடு முடித்து சுவாமி கோயிலுக்குத் திரும்பியது.