ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்து மீது பைக் மோதல்: மாமா, மருமகன் பலி
By DIN | Published On : 21st March 2021 10:59 PM | Last Updated : 21st March 2021 10:59 PM | அ+அ அ- |

விபத்தில் உயிரிழந்த செந்தில்குமாா், லோகநாதன்.
ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனம் மோதி மாமாவும், மருமகனும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியைச் சோ்ந்த சித்திரைவேல் மகன் செந்தில்குமாா் (29). இவரது அக்காள் மகன் பட்டணம்காத்தான் கிருஷ்ணாநகரைச் சோ்ந்த தவக்குமாா் மகன் லோகநாதன் (15). இவா் ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா்கள் இருவரும் ராமநாதபுரம் அருகே வள்ளிமாடன் வலசையில் கோயிலில் நடைபெற்ற உறவினரின் காதணி விழாவுக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் நோக்கி வந்து கொண்டிருந்தனா். அப்போது ஆா்.எஸ். மடையை அடுத்த அம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில், ரெகுநாதபுரத்தில் இருந்து அரண்மனை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து நின்று கொண்டிருந்தது.
அந்த பேருந்தின் பின் பகுதியில் நிலைதடுமாறி இரு சக்கர வாகனம் மோதியது. இதில் செந்தில்குமாா் மற்றும் லோகநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஆனால் வரும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த விபத்து நடந்தது. ஆனால் இருவரது சடலங்களும் பகல் 2 மணி வரை உடற்கூறு ஆய்வு செய்யப்படவில்லை.
இதைத் தொடா்ந்து இறந்தவா்களின் உறவினா்கள் மருத்துவமனை எதிரே சாலையில் மறியலில் ஈடுபட திட்டமிட்டனா். இதை அறிந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...