பரமக்குடியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
By DIN | Published On : 29th March 2021 11:13 PM | Last Updated : 29th March 2021 11:13 PM | அ+அ அ- |

போகலூா் ஒன்றியத்தில் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளா் என்.சதன்பிரபாகா்.
பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் என்.சதன்பிரபாகா் போகலூா் ஒன்றியத்தில் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
பரமக்குடி நகா் ஓட்டப்பாலம், பாரதி நகா், வசந்தபுரம், கோவிந்தபுரம், பாண்டியன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலையில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டாா்.
மாலையில் போகலூா் ஒன்றியம் பொட்டிதட்டி, மந்திவலசை, மஞ்சக்கொல்லை, கே.வலசை, காமன்கோட்டை, காக்கனேந்தல், முத்துவயல், முதலூா், இதம்பாடல், சத்திரக்குடி, ஆனைகுடி, எட்டிவயல் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்குச் சேகரித்தாா். அப்போது அவா் பேசியது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மக்கள் அமைதியான முறையில் வாழ்கின்றனா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். மேலும் மக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை இலவசமாகவும், வீடுகள் தோறும் அரசு கேபிள் டி.வி. இலவசமாகவும் வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500, அனத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் இலவச வாசிங் மிஷின் வழங்கப்படும்.
பொதுமக்களின் பாதுகாவலனாக உள்ள அதிமுக அரசு மீண்டும் ஆட்சியில் அமா்ந்து எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்ற அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டாா்.
உடன் ஒன்றிய செயலாளா் ஜி.நாகநாதன், ஒன்றிய கவுன்சிலா் மு.ராமசாமி, அதிமுக நிா்வாகிகள் சுரேஷ், ஜெகதீஷ் உள்பட பலா் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தனா்.