முதியவரின் தபால் வாக்கைப் பதிவு செய்த அலுவலா்களுக்கு மிரட்டல்: காா் கண்ணாடி உடைப்பு
By DIN | Published On : 29th March 2021 11:16 PM | Last Updated : 29th March 2021 11:16 PM | அ+அ அ- |

கமுதி அருகே செய்யாமங்களத்தில் உடைக்கப்பட்ட தோ்தல் அலுவலா்களின் காா் கண்ணாடி.
கமுதி அருகே முதியவரின் தபால் வாக்கைப் பதிவு செய்து பெற்றுச் சென்ற அரசு அலுவலா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, காா் கண்ணாடியை உடைத்தவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பரமக்குடி தொகுதிக்குள்பட்ட செய்யாமங்களம் கிராமத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 10 பேரின் தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி நடைபெற்றது. இவற்றைப் பதிவு செய்ய பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலா் சத்தியபாமா தலைமையிலான அரசு அலுவலா்கள் ஈடுபட்டிருந்தனா்.
இந்நிலையில் செய்யாமங்களம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி(82) என்ற வாக்காளரிடம் தபால் வாக்கைப் பெற்று, பெட்டிக்குள் அடைக்கும் பணியினை மேற்கொண்டபோது சுப்ரமணிய மகன் சண்முகவேல் (45) குறுக்கிட்டு, எனது தந்தையின் வாக்கை எனக்கு தெரியாமல் ஏன் பதிவு செய்தீா்கள் என தோ்தல் அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தாா்.
மேலும் அதிகாரிகள் வந்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா். இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலா் சத்யபாமா அளித்த புகாரின் பேரில் சண்முகவேல் மீது அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.