ராமநாதபுரத்தில் சாலையோரக் கடைகள் 3 இடங்களுக்கு மாற்றம்
By DIN | Published On : 11th May 2021 01:27 AM | Last Updated : 11th May 2021 01:27 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் நகரில் சந்தை மற்றும் சாலையோரக் கடைகள் பள்ளி மைதானம் உள்ளிட்ட 3 இடங்களுக்கு மாற்றப்பட்டு திங்கள்கிழமை முதல் செயல்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலையானது வேகமாக பரவி வருவது பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆகவே மக்கள் அதிகம் கூடும் வாரச் சந்தைகள் மூடப்பட்டன. நகரில் அரண்மனை, புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் செயல்பட்ட சாலையோரக் கடைகளுக்காக ராஜா பள்ளி மைதானம், பழைய பேருந்து நிலையம், பட்டினம்காத்தான் அம்மா பூங்கா பகுதி ஆகியவை ஒதுக்கப்பட்டிருந்தன.
ராஜா பள்ளி மைதானத்தில் இடதுபுறத்தில் 20 கடைகளுக்கு பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே மேலும் 4 கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் மையப்பகுதி மற்றும் வலது புறத்தில் சாலையோரக் கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு அங்கு சுமாா் 50 போ் கடை அமைத்துள்ளனா்.
ராஜா பள்ளி மைதானத்தில் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையில் கடைகளுக்கு அனுமதித்த நிலையில், சமூக இடைவெளியுடன் மக்கள் பொருள்கள் வாங்குமாறு ஒலி பெருக்கியில் நகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டது.
நகரின் ரயில் நிலையம் எதிரேயுள்ள பழைய பேருந்து நிலைய வளாகத்தில் மீன் விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அங்கு 50 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, பட்டினம்காத்தான் பகுதி மக்களுக்காக அம்மா பூங்கா பகுதியில் ஏற்கெனவே இருந்த இடத்தில் காய்கனி உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தாற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்ட இடங்களில் இரவிலும் பொருள்களை ஏற்றி இறக்கும் வகையில் மின்விளக்கு வசதி உள்ளிட்டவை செய்து தரப்பட்டுள்ளதாக நகராட்சி பொறியாளா் நீலேஸ்வரன் தெரிவித்தாா்.