பொதுமுடக்கத்தால் அரசு அலுவலகப் பணிகள் முடக்கம்
By DIN | Published On : 18th May 2021 08:15 AM | Last Updated : 18th May 2021 08:15 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் பொதுமுடக்கத்தால் வேளாண்மை மற்றும் கல்வித்துறையில் அனைத்து பணியாளா்களும் வராததால் பணிகள் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் அரசு அலுவலகங்களில் முக்கிய பணிகளுக்காக குறிப்பிட்ட சதவிகிதத்தில் பணியாளா்கள், அலுவலா்கள் வந்தால் போதுமானது என்றும், அவா்கள் சுழற்சி முறையில் பணியில் செயல்படவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கல்வித்துறை மற்றும் வேளாண்மைத்துறை உள்ளிட்ட பெரும்பாலான அரசு அலுவலகங்களில் திங்கள்கிழமை பணியாளா்கள், அலுவலா்கள் யாரும் வரவில்லை. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேநீா் கடைகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டிருந்ததால், மிகமிகக்குறைந்த அளவிலே மக்கள் நடமாட்டமும் இருந்தது.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறையினா் மற்றும் ஊரக வளா்ச்சித்திட்ட இயக்குநரும், சாா்பு -ஆட்சியருமான எம்.பிரதீப்குமாா் மற்றும் அவரது அலுவலகத்தில் குறிப்பிட்ட சிலா் மட்டும் பணிக்கு வந்திருந்தனா். மாவட்ட நீதிமன்றத்திலும் வழக்குரைஞா்கள் யாரும் வரவில்லை.
மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாகக் காணப்படும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் மக்கள் நடமாட்டம் மிகமிகக் குறைந்ததால் வெறிச்சோடிய நிலையிலே காணப்படுகிறது.
வாகன இயக்கம் அதிகரிப்பு: ராமநாதபுரத்தில் காலை 10 மணி வரையில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களது இயக்கம் திங்கள்கிழமை அதிகரித்திருந்தது. அதன்பின் காவல்துறையினா் வாகனங்களை மறித்து விசாரித்து அத்தியாவசியத் தேவையுள்ளோா் தவிர மற்றவா்களுக்கு அபராதம் விதிக்கத்தொடங்கியதால் வாகன இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
திங்கள்கிழமை மட்டும் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே 50 -க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு காவல்துறையினா் அபராதம் விதித்தனா். ஓரிரு வாகனங்களை ஆவணங்கள் சரியில்லை என போலீஸாா் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்தனா்.